யாழ் போதனா வைத்தியசாலையில் அதிர வைக்கும் வர்த்தகம்: வைத்தியரின் வங்கிக்கணக்கில் பணம் போட்டாலே சத்திரசிகிச்சை! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Wednesday, December 5, 2018

யாழ் போதனா வைத்தியசாலையில் அதிர வைக்கும் வர்த்தகம்: வைத்தியரின் வங்கிக்கணக்கில் பணம் போட்டாலே சத்திரசிகிச்சை!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிங்கள புற்றுநோய் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கொடுத்து சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுடன் தகவல்களை திரட்டி, விசாரணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த வைத்தியர் கடமையாற்றி வருகிறார். புற்றுநோயாளிகளிடம் இவர் பணத்தை பெற்று சத்திரசிகிச்சை செய்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் கிடைக்காத மருந்தொன்றை, தனியார் மருந்தகங்களில் பெற்றே சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென கூறியே பணத்தை பெற்றுள்ளார். இதற்காக ஒவ்வொருவரும் சுமார் ஒரு இலட்சம் ரூபா வரையில் அவருக்கு செலுத்தியுள்ளனர். சுமார் ஒன்றரை வருடங்களாக இது வைத்தியசாலைக்குள் தொடர்ந்துள்ளது.

சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய நோயாளியை சத்திர சிகிச்சை கூடத்திற்கு எடுப்பதும், வெளியில் அனுப்புவதுமாக இரண்டு மூன்று முறை நடந்து, அதன் பின்னரே பணம் பெறும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவது வழக்கமாக இருந்தன.

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக உருவாகியுள்ள மோசமாக ஒரு கலாசாரம் இந்த வர்த்தகருக்கும் வாய்ப்பாகியுள்ளது. பிரபலமான சத்திரசிகிச்சை நிபுணர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நோயாளிகள் சந்தித்து பேசுவது குதிரைக்கொம்பு. அவர்கள் நோயாளர் விடுதியில் தங்கியிருந்தாலும், குறிப்பிட்ட சத்திரசிகிச்சை நிபுணரை சந்திக்க முடியாது. ஆனால், ஆயிரத்து ஐநூறு ரூபா செலுத்தி முன்பதிவு செய்தால், தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை நிபுணர்களை சந்திக்க முடியும்.

வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் ஊடாக சென்றால், சத்திரசிகிச்சை உடனடியாக செய்ய முடியாது. மாறாக, குறித்த சத்திரசிகிச்சை நிபுணரை தனியார் வைத்தியசாலையில், பணம் செலுத்தி சந்தித்தால், உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவார்கள். இதைத்தான் பெரும்பாலான சத்திரசிகிச்சை நிபுணர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நடைமுறையுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாக தனது வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்துபவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்துள்ளார் அந்த சிங்கள வைத்தியர்.

திருநெல்வேலியிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையிலும் குறித்த வைத்தியர் சிகிச்சைக்கு வருகிறார். ஏற்கனவே யாழில் உருவாகியுள்ள வைத்திய மாபியா கலாசாரத்தின் அடிப்படையில், அங்கு வைத்தே சிங்கள வைத்தியர் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுடன் பண பேச்சு நடத்தினார்.

உரிய பணம் வைத்தியரின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்ட பின்னரே, சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒன்றரை வருடங்களாக இந்த நடைமுறை நீடிக்கிறது. குறித்த சிங்கள சத்திரசிகிச்சை நிபுணரின் கீழ் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்களிற்கு இந்த விடயம் நன்றாக தெரியும். இதன்மூலம் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் இது ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர் ஒருவரின் மாமனாரும் அண்மையில் பணம் செலுத்தி, சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. குறித்த தாதிய உத்தியோகத்தர் இந்த விடயம் தொடர்பில் முறையிட்டதையடுத்தே விடயம் வில்லங்கமாகியுள்ளது.

வைத்தியரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை விபரங்கள் திரட்டப்பட்டு, சத்திரசிகிச்சைக்குள்ளானவர்களுடன் நேரடியாக பேசுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தற்போது கூறுகிறது. பணம் கொடுத்தவர்களிற்கு அந்த பணம் உரிய முறையின் கீழ் மீளளிக்க நடவடிக்கையெடுக்கப்படுமென்றும் கூறுகிறது. எனினும், குறித்த தாதிய உத்தியோகத்தர் இந்த விடயத்தை ஒரு விவகாரமாக்கும் வரை, வைத்தியசாலை நிர்வாகமும் மெத்தன போக்கையே கடைப்பிடித்தது.

யாழ் போதனா வைத்தியசாலையில் உருவாகியுள்ள இந்த வர்த்தக கலாசாரத்தை சீர்செய்தால் மாத்திரமே, நோயாளர்கள் சிரமமில்லாத சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென்பதே நிதர்சனம்!.

No comments:

Post a Comment

Post Top Ad